உலகசினிமா மாமேதை அகிரா குரோசாவாவின் செவன் சாமுராய் - 1954.
புகழ்பெற்ற உலகத்திரைப்படங்களில் சமீபத்தில் கண்டு வியந்தது ஜப்பானிய திரைப்பட மாமேதை அகிரா குரோசாவா இயக்கிய செவன் சாமுராய். 1954 இல் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னிலை குறையாமல் தனித்துதான் நிற்கிறது. இன்று இருப்பது போன்ற எவ்வித நவீனக் கருவிகளும் திரைத்துறையில் வந்திராத அக்காலகட்டத்தில் அவரது முயற்சிகள் அளப்பரியது ஆகச்சிறந்தது. தொழில்நுட்பம் பின்தங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் இத்தனை திறமையாக செவன் சாமுராய் திரைப்படத்தை இவரால் எப்படி இயக்க முடிந்தது என்று வியந்துபோனேன்.
செவன் சாமுராய் படத்தின் திரைக்கதை ஐப்பானிய கிராமமொன்றில் 16 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மலையடிவாரத்தில் இருக்கிற சிறு கிராமத்தின் விவசாய உற்பத்தித் தானியங்களையும் பல்வேறு வளங்களையும் பல முரட்டுத்திருடர்கள் கொள்ளையடிக்க வருவதை அறிந்த அக்கிராமத்தவர்கள் தங்கள் நிலங்களையும் வளங்களையும் எப்படியாவது தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதற்காக நகரவெளியில் இருந்து கூலிக்கமர்த்தப்பட்ட ஏழு தலைசிறந்த வீரர்களின் உதவியோடு போராடி வெல்வதாக இத்திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
விளைந்ததும் வழக்கம் போல் கொள்ளையர்கள் வருவார்கள் என்பதை அறிந்ததும் அக்கிராமமே அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. தங்களின் வளங்களைக் கைப்பற்ற குதிரைகளில் கையில் துப்பாக்கியோடு வலம்வரும் முரட்டுத்திருடர்களை எதிர்கொள்ள கையில் வெறும் வேல் கம்புகளோடு காத்திருக்கின்றனர் கிராமவாசிகள். அவர்கள் ஏற்கனவே கொள்ளையர்களிடம் தங்களின் தானியங்களையும், மனைவி, மகள்களையும் பலமுறை இழந்திருக்கிறார்கள். எனவே இம்முறை கிராமத்தவர்கள் ஊர்ப் பெரியவரிடம் இதுபற்றி ஆலோசிக்க வருகிறார்கள். அவர், அருகிலுள்ள நகரத்துக்கு சென்று சாமுராய்களை கூலிக்கு அழைத்துவந்து தங்கள் கிராமத்துக்கு காவல் பணியில் அமர்த்தலாம் என அறிவுரைக்கிறார். அக்கிராமத்தில் உள்ள குடியானவர்கள் நகரத்துக்கு சென்று சாமுராய்களை அழைத்து வருவது என தீர்க்கமாக முடிவெடுக்கிறார்கள். நகரத்தில் சாமுராய்கள் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம், சிறு கிராமத்தவர்களால் சாமுராய்களுக்கு பெரும் பணமோ, பொருளோ தர முடியாது. தங்களால் இயன்ற உணவை மட்டுமே தரமுடியும். அதனால் பசியோடு இருக்கிற சாமுராய்களாக தேடிப்பிடிக்க வேண்டும் என எண்ணி இறுதியில் அனுபவம் வாய்ந்த சாமுராய் ஒருவர் அவர்களுக்கு உதவ முன் வருகிறார். கிராமத்தை காவல் காக்க ஏழு சாமுராய்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஆறு வீரர்கள் தான் கிடைக்கிறார்கள். கிக்குசியோ என்கிற வேடிக்கையான நபரும், அவர்களின் அனுமதியில்லாமலே அவர்களை பின் தொடர்ந்து வருகிறார். அவரும் கொள்ளையர்களுக்கு எதிராக போராடுவதால் அவரையும் சேர்த்து ஏழு சாமுராய்கள் அமைகிறார்கள். ஏழு சாமுராய்களும் பெரும் குதிரைகளில் பாய்ந்துவரும் கொள்ளையர்களுடன் பலமுறை மோதும் காட்சியை அகிரா குரோசவா போர் மாதிரியாகவே படமாக்கியிருக்கிறார்.
குடில்கள் சில தீக்கிரையாகின்றன. மக்களில் பலர் காயப்படுகிறார்கள். படத்தின் இறுதியில் கொள்ளையர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள். சாமுராய்களில் நான்கு பேர் உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள். உயிரோடு இருக்கும் மூன்று சாமுராய்களும் சோகத்தில் இருக்க, குடியானவர்கள் கிராமம் பாதுகாக்கப்பட்ட குதூகலத்துடன் பாட்டுபாடி வயலில் நாற்று நட்டுக் கொண்டிருப்பார்கள். வயதான சாமுராய் கம்பெய் என்பவர் கடைசியில் வெற்றி பெற்றது குடியானவர்கள், தோற்றது சாமுராய்கள் என்று சொல்வதுடன் படம் நிறைவடையும்.
இது இன்றைய சூழலில் இயக்குநர் பிரபுசாலமனால் எடுக்கப்பட்ட 'கும்கி' படம் போன்ற சாயலை ஒத்திருக்கும். 2012 இல் வெளிவந்த கும்கி கதையும் மலைவாழ் மக்களின் உற்பத்தித் தானியங்களை தனதாக்கித் திரியும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட வெளியில் இருந்து வரவழைக்கப்படும் மாணிக்கம் என்ற யானை கும்கியாக மாறி அதனோடு கடுமையாக மோதி அதனைக் கொன்று இறுதியில் தானும் உயிர்த்தியாகம் செய்வதாக நிறைவடையும்.
செவன் சாமுராய் ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் இன்றைய திரைக்கதையாளர்களின், மனதிலும் ஆக்கத்திலும் அகிரா குரோசாவா அறிந்தோ அறியாமலோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என உணரமுடிகிறது. அவர் வகுத்த பாதையில் இன்று பலரும் பயணப்படுகிறார்கள் என்பதை நன்கறியமுடிகின்றன.
இன்பம், இழப்பு, பகை, சுயநலம், காதல், வீரம், தத்துவம் போன்ற எண்ணற்ற மனித உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கிய செவன் சாமுராய் என்றும் உலகசினிமா வரலாற்றில் தனித்தொளிரும். உலகசினிமாவில் அகிரா குரோசாவாவின் பங்கு அளப்பரியது.
திரைத்துறையில் எதையேனும் செய்து காட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடு முயன்று கொண்டிருப்பவர்களுக்கும், எம்மொழியில் எடுக்கப்பட்டாலும் நல்ல படைப்புகளை பார்த்தே தீரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அகிரா குரோசோவாவின் படைப்புகள் காலத்தின் வேகத்தில் நிச்சயம் நின்று பேசும்.
******************************
தொகுப்பு : மு.செல்லமுத்து


Comments
Post a Comment