ஆ.பூமிச்செல்வத்தின் - 'மதுரைச் சிறுகதைகள்' தேர்வும் தொகுப்பும் நூல் விமர்சனம்
நம்மில் பலரும் அவரவர்
வாழ்க்கையைப் பற்றிய பலவிதமான மதிப்பீடுகளின் வாயிலாகத்தான், கதைகளோடே
பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றில்தான் படைப்பாளியும் படிப்பாளியும்
அடங்குவர். கடந்து போன தலைமுறைகளின் வாழ்வு பற்றியும், வாழ்கின்ற சமூகம்
பற்றியும் விமர்சனத்தில் அறிய முற்படாதவர் அல்லது அவற்றில் அக்கறை
இல்லாதவருக்குத்தான் கதை வெறும் பொழுதுபோக்கு. தம் வாழ்வியல் நிகழ்வுகளை அல்லது
அனுபவங்களை உணர்வுப் பூர்வமாக கதைகள் மூலம் உள்வாங்கிக் கொள்பவருக்கு அவை தம்
வாழ்வாகவே உருமாறுகிறது.
தொல்பழமையும் வரலாற்று
முக்கியத்துவமும், பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழினம் கைக்கொள்ளும்
பழக்கவழக்களும், கட்டமைத்த பண்பாட்டு விழுமியங்களும், படைத்தளித்துள்ள கலை -
இலக்கிய வகைமைகளும் சமகாலச்சமூகத்தில், பற்பல அந்நியக் கலப்புகளோடு சவால்களைத் தாண்டி
சரித்திரத்தில் பேசப்பட்டு வருகின்றன என்றால் படைப்புகளும் அதனை ஆக்கவதற்காக தனது
வாழ்க்கை நிமிடங்களை செலவு செய்த படைப்பாளிகளின் உன்னதமான செயல்களுக்கு மக்களினம்
மனமுவந்து பாராட்ட வேண்டும். அந்த வகையில், மதுரை அமெரிக்கன்
கல்லூரித் தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர். ஆ.பூமிச்செல்வம் அவர்கள் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு தொகுத்துத் தந்துள்ள ‘மதுரைச் சிறுகதைகள்’ என்னும் நூலைப் பற்றிப் பார்ப்போம்.
ஏனெனில், ஏறத்தாழ 27 கலைஞர்களின்
கைவண்ணத்தில் இயற்றப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்ற
‘மதுரைச்சிறுகதைகள்’ என்னும் நூலினைப் படிக்கும் பொழுது, மதுரை மண்ணின் மீதும்,
அம்மண்ணின்
மைந்தர்களின் வாழ்வியலை படைப்பிலக்கியத்தில் ஆக்கித்தந்த படைப்பாசிரியர்கள் மீதும்
என்மனம் தீராக்காதல் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். 2500 ஆண்டுகால மாமதுரையின்
மகத்துவங்களை எப்படிச் சொல்வது முச்சங்கம் வைத்து செந்தமிழ் வளர்த்த இடம், பாண்டியர்களின்
இரண்டாம் தலைநகரம், கரைபுரண்டு ஓடிய வைகையின் பேரழகில் கவிஞர்கள் பலரின் கவனம்
தொலைந்ததால் உலகநாடுகளின் பார்வையில் கிழக்கின் ஏதென்ஸ், இந்த நூற்றாண்டின்
தூங்காநகரம், இனிவருங்காலத் தலைமுறைகளுக்கும் தனக்கெனத் தனித்த வரலாறுகளை மீனாட்சியம்மனின்
துணையோடு நிரூபிக்கக் காத்திருக்கும் மரியாதைக்குரிய மாநகரம். மதுரைச் சிறுகதைகள்
என்னும் இத்தொகுப்பானது வழக்கத்தில் உள்ள விதிகளில் சற்று மாறுபட்டு நடப்பியல்
சமூக சூழலுக்கேற்ப பொருந்திப் போகக்கூடிய அளவில் தொகுத்துத் தந்திருக்கும்
இம்முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டக்கூடியதும் ஆகும். ஏனெனில், ‘மதுரையைப் பற்றிய
மதுரைப் படைப்பாளிகளின் புனைவுகள்’ ‘மதுரை குறித்தான மாற்றுப் புலப்
படைப்பாளர்களின் பார்வைகள்’ என, இருவேறு நிலைகளில் கதைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
சிறுகதைகள் குறித்த இம்முயற்சி ஒரு நூற்றாண்டு கால இடைவெளியைக் கடந்து மதுரைப்
படைப்பாளிகளைக் குறித்து தேர்வும் தொகுப்பும் செய்யப்பட்டுள்ளது வியப்பைத்
தருகிறது.
தமிழின் இரண்டாவது நாவலான
(1896) கமலாம்பாள் சரித்திரத்தைப் படைத்துத் தந்த பி.ஆர்.ராஜமையரும் ஒருங்கிணைந்த
மதுரைக்காரர்தான். இவருடைய தொடர்ச்சியாக மதுரையின் கலை இலக்கியம் நவீன
படைப்புலகில் தன்னை இந்த நூற்றாண்டில் வெற்றியோடு விமர்சித்துக் கொண்டிருக்கிறது.
மதுரைச் சிறுகதைகள் என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதையாளர்களை உள்ளடக்கி,
எம்.ஜி.சுரேஷ், சிவக்கண்ணன், சு.வெங்கடேசன், அருணன் எனப் புதினங்கள்
வழியாகவும், அபி, மேலூர் மாவேந்தன், அன்பாதவன், லிபி ஆரண்யா, செந்தி, சாம்ராஜ் என கவிதைகள்
வாயிலாகவும், மதுரகவி பாஸ்கரதாஸ், ராஜ்குமார், ந.ம.வி.ரவி என நாடக ரீதியாகவும், சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன் எனப் பேச்சுக் கலையை முன்வைத்தும், ரஃபிக், பாபு, ஸ்ரீரசா, காந்திராஜ் என
ஓவியக்கலை மூலமாகவும், எம்.எஸ்.சுப்புலஷ்மி, வைகைப்புயல் வடிவேலு என திரைக்கலையை
மையமிட்டும், வடபழஞ்சி சந்தானம், விஜயலட்சுமி – நவநீதகிருஷ்ணன், பரவை முனியம்மா என
நாட்டுப்புறக் கலைகளை அடியொற்றியும், ந.முருகேசபாண்டியன், சுந்தர்காளி, பாண்டிமுனி எனத்
திறனாய்வுகளை முன்வைத்தும் மதுரைப் படைப்பாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர்.
அந்தவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 மதுரைச் சிறுகதையாசிரியர்களின் வரிசைப்படுத்தப்பட்ட
இத்தொகுப்பு முயற்சியானது சிறந்த நோக்கத்தில் வாசிப்புத் தளத்தில் நல்ல
வரவேற்பையும் பெறும் என்பது உறுதி.
இனி, இத்தொகுப்பிலுள்ள
சிறுகதைகளை உள்வாங்கிக் கொண்டவனாக அல்லது எனக்குப் பிடித்த கருத்துரைகளை கதையின்
சாராம்சத்தினை விளக்கும் முகமாக என் வாசிப்பு வழியில் உங்களோடு பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.
வாடிவாசல் என்ற அருமையான
நாவலை தமிழுக்குத் தந்த சி.சு.செல்லப்பாவின் ‘சத்யாக்ரகி’ என்னும்
சிறுகதையானது இத்தொகுப்பில் முதலிடத்தில் இருக்;கவேண்டிய
தகுதியைப்பெற்றுள்ளது. மதுரை எனக்குப் புதுசு இல்லை எனத் தொடங்கும்
இக்கதைக்களமானது ஒரு தலைமுறையில் அதாவது 32 வருடங்களுக்குள் மதுரையில் நிகழ்ந்த
மாற்றங்களை, இந்திய சுதந்திரத்திற்காக மாணவப் பருவத்திலேயே மகாத்மாவின் சத்யாகிரகத்தில் இணைந்து போராடிச் சிறைக்குச் சென்ற ஒருவரின் தன்னனுபவம்
குறித்த கதையாக விரிந்துள்ளது.
சிறுகதை வரலாற்றில் புதிய
பாதையை ஏற்படுத்தித்தந்த பி.எஸ்.ராமைiயாவின் ‘மடித்தாள்பட்டி’
என்னும்
சிறுகதையானது மேற்கத்திய கதை சொல்லும் மரபினை பின்பற்றாமல், தமிழகத்திற்கேயுரிய தொன்மம், புராணம், வரலாறு, வைதீகம் சார்ந்த
கதை சொல்லும் பாணியில் உருவாகியிருப்பது எழுத்துக்களத்தின் வரலாற்றியில்
பின்புலத்ததை, பண்பாட்டுக் கட்டமைவுகளை மிக நுணுக்கமாக அறிந்துள்ளார் என்றுதான் சொல்ல
வேண்டும். மதுரையிலிருந்து பழனிக்குப் போகும் சாலையிலிருந்து சரியாக நான்கு மைல்
தூரத்திலிருக்கும் மடித்தாள்பட்டிக் கிராமத்தையும், அவ்வூர் உருவாகக் காரணமான
மடித்தாளம்மன் வரலாற்றினை சொல்லும் பொழுது மதுரையை ஆண்ட நாயக்க மன்னருக்கும்
சேதுபதி மகாராஜனுக்கும் உள்ள நட்புறவையும், அக்காலத்தில் ஏற்பட்ட
மைசூர்ப் போரினையும் ஒரு சிறுகதைக்குள் அடக்கிச் சொல்லியிருப்பது உண்மையில்
கைத்தேர்ந்த ஒரு கலைஞனால் மட்டுமே முடியும் என்றே சொல்ல வேண்டும்.
ஜி.நாகராஜன் சமூகம்
மற்றும் ஒழுக்கம் சார்ந்த தீர்மானங்களும் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் தனிமனித
வாழ்வின் எழுச்சியையும் வீரியத்தையும் எடுத்துரைக்கும் குரல் இவருடையது. இவருடைய
படைப்புகளின் வெளிப்பாடு விளிம்புநிலைக்காட்பட்ட மனிதர்களை நோக்கியதாகவே
இருக்கும். அதனடிப்படையில், ‘சம்பாத்யம்’ என்ற இச்சிறுகதையும் அவ்வாறே எடுத்தாளப்பெற்றுள்ளது.
வேரறுக்கப்பட்டு வேற்றுப்
புலத்தில் நடப்பட்டோர், வயிற்றுப் பாட்டுக்கென விச்செடியாய் உருமாறிய
பரிதாப நிலையைச் சித்தரிக்க முயலுகிற ‘மூன்றாம் சுமை’யானது, எம்.எஸ்.கல்யாண
சுந்தரத்தின் நினைவுப் பகிர்தலாக விரியும் பட்சத்தில், ‘ஆசிரியர் - நாகு’ என்னும் இரு வேறு
பாத்திர நகர்வுப் பாதையின், துரவ முரண்பாட்டு உரையாடல் நியாயத்தில், ஏதேனும் ஒரு
பக்கமாகச் சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படாமல், வாசகர்கள் விரும்பும்
அமைப்பில் இடம்பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
சொந்த மண்ணிலேயே இன்று
அந்நிய இனமாக ஆக்கப்பட்டு, எடுப்பார் கைப்பிள்ளைகளாக அடையாளப்படுத்தப்பட்ட அவலநிலையில்,
இஸ்லாமிய
மற்றும் இன்னபிற இனத்தவருக்குள்ளான இணக்கத்தை இசைவாக்கி நகர்வுறுவதாக அமைவதே ‘தேன் கலந்த நீர்!’
ஆழவந்த
பலருக்கும் மதுரை மண் தாய்மண்ணாகிவிட, இருதரப்பினர் வசமிருந்து, இம்மண்ணுக்கெனக்
கிடைக்கப்பெற்ற நன்மைகளை, வரலாற்றுச் சான்றுகளுடன் காட்சிப்படுத்தியுள்ளமையால் ஆசிரியர்
‘காஸ்யபன்’
இக்கதைவழி
பாராட்டத்தகுந்த படைப்பாளியாகிவிட்டார்.
இன்ப
துன்பங்கள் பின்னிப்பினைந்து இழைவுறுகிற, மனிதமனத்தின் அடியாழத்திலிருந்து பீரிட்டுக்
கிளம்புகிற அந்தரங்க உணர்வுகளை கதையெனப் பதிவுசெய்து, வாசகர்களின் மனதிற்குள்
மடைமாற்றித் தந்துவிடுகிற ரஸவாதத் தன்மை பொருந்தியமைவதே, கோபி கிருஷ்ணனின்’‘பரிணாமம்’.
அன்பின் இழப்பை, அரவணைப்பின்
இன்மையை, உறவுகள் தந்துள்ள துரோக அனுபவங்களை கச்சிதமாகப் பதிவு செய்துள்ளது செண்பகம்
ராமசாமியின் ‘புண்கணீர் பூசல்’.
நகர்மய நெருக்கடிகள்,
இதனுள்
ஆட்பட்டு திரியும் நகரவாசிகள், இவர்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற தீர்வுகளற்ற, தீராப்
பிரச்சனைகளின் தொகுப்புகள் எனக் காட்சிப்படுத்தப்பட்ட ‘உஷாதீபனின்’ ‘புழுக்கம்’.
வேடிக்கையும் பரிதாபமும்
வெள்ளந்திக் குணாம்சங்களும் பொருந்திய மனிதஜீவன்கள் இன்னமும் இம்மண்ணில்
மிச்சமிருப்பதால்தான், இவ்வுலகமானது தன் தடத்தில், தத்தித்தாவி நகர்கின்றதோ
என்கின்ற ஐயவுணர்வைக் கிளரச்செய்து, நெகிழ வைத்திடும் புனைவாக விரிவதே ‘முருகேசபாண்டியனின்’
‘போதை’
என்னும்
நடப்புக்கால கதை அப்பட்டப் பரதிபலிப்பாக அமைந்துள்ளது. இது தவிர, புதுமைப்பித்தன்,
சுஜாதா,
கோணங்கி
போன்ற பெரும் படைப்பாளர்களின் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மதுரை மல்லி, வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி, சித்திரைத் திருவிழா, மீனாட்சியம்மன், மஞ்சுவிரட்டு,
எண்பெருஞ்
சமணக் குன்றுகள், சுண்ணாம்புக்காரத்தெரு, ஆய்த எழுத்துடைய ஆணைமலை,
ஆயிரங்கால்
மண்டபம், கைலாசபுரமான எரிநகர், நாலாம் தமிழ்ச்சங்கம், பாண்டிமுனி, மதுரைவீரன்
சந்நிதி, திருவிளையாடல்களின் நிகழ்வுக்களம், பாரதியை முதற்பாடல் புனைய வைத்த இடம், காந்தியை மகானாக
மாற்றிய மண், ஒடுக்கப்பட்டவரைக் கோயிலின் உள் அழைத்துச் சென்ற புதுமை பூமி, ஆசியாவின்
மாபெரும் தங்கத்திரை, குளுமையும் வெம்மையும் ஒருங்கிணைத்துத் தருகிற ஜிகர்தண்டா,
தூங்காநகரம்,
பெருங்காமநல்லூர்த்
தியாகம் எனப் பன்முகப்பட்ட நேர்நிலையம்சங்களும், எட்டாயிரம் சமணர்கள்
கழுவேற்றம், சாமநத்தம், கழுவேறுகால், கோவலன் பொட்டல், அனல் வாதம் புனல் வாதம் என்னும் பல்வேறு நிகழ்வுகளை
சுமந்த மதுரை, இவற்றை விடுத்தும் கொலைநகரமாகவும் நடப்புச் சூழலில், காட்சி மற்றும் எழுத்து
ஊடகங்களில் சுப்பிரமணியபுரமாக, மதுரைச் சம்பவமாக இத்தொகுப்பிலுள்ள கதைகள்
காட்சிப்படுத்தாமல் இல்லை.
ஹைபிரட் மல்லிகள், விளம்பரப்
பதாகைகளைத் தாங்குவதற்காகவே வலம் வருகிற கள்ளழகர், முடக்கப்பட்டுத் தவிக்கும்
இணையதள மீனாட்சி, போராடிப் பெறுகிற தமிழர்களின் தலைசிறந்த ஜல்லிக்கட்டு,
குவாரிகளாகிவிட்ட
சமணக்குன்றுகள், வீடுவாசல் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் சிக்கிச்
சீரழியும் ரியல் எஸ்டேட் நிலங்கள், கூலிக்காக கொலைசெய்ய முன்வரும் கும்பல்கள், நகைக்காக
தாலியைக்கூட அறுக்க முயலுகிற நவநாகரிக மனிதர்கள், இரயில்வே ஸ்டேசனிலிருந்து
பெரியார் பேருந்து நிலையத்துக்குச் செல்ல, ஆரப்பாளையம் - அரசரடி சுற்றி வருகிற
நியாயக்கார ஆட்டோக்கள் என்று மதுரை மாற்றுப்பாதையில் பயணப்பட்டு புதிர் நிறைந்த
ஒன்றாக பல்வேறு பரிதவிப்புகளோடு பிரதிபலிப்பதாக, ஜி.நாகராஜன், கர்ணன், விஜயமகேந்திரன்,
சமயவேல்,
சுரே~;
குமார
இந்திரஜித் போன்ற 27 சிறுகதையாசிரியர்களின் படைப்புகள் இத்தொகுப்பில்
காட்சிப்படுத்தியுள்ளன.
பிறக்கும் ஊர்களுக்கும்
இறந்த ஊர்களுக்குமிடையே
நீ எப்பொழுதும் ஜீவனொடு
வாழ்கிறாய்!
உன் பழமைச் சிறப்பிலே
எனக்கொரு மோகம்!
உன் புதிய வளர்ச்சியிலே
எனக்கொரு பெருமை
‘வையை’ மணல் பரப்பின்
புல்வெளிகள்,
வானத்துக்குக் கீழே
முதலில் தெரியும்
பூமியாய் அமையும்
கோபுரங்கள்
கோபுர அடிவாரக்
கலைத்தூண்கள்
பழைய ஊரின் சாயலாய் அமையும்
குறுகல் சந்துக்கள்,
குட்டிச்
சுவர்கள்
சிற்றூர் மக்களின்
வணிகச்சந்தை
ஆண்டுதோறும் ஆரவாரத்
திருவிழா,
பழைய பழைய கலைகளின்
முடிவுக்கால அவலங்கள்
தெருவெங்கும் தெரியும்
சின்ன சின்ன கோயில்கள்
ஊரின் எல்லைகளில் ஐயனார்
குதிரைகள்,
எல்லைகளாய்த் தோன்றும்
சிறுநீல மலைகள்:
மலைகளின் அடிவாரத் தாமரைக்
குளங்கள்:
இவற்றுடன் நான் கொண்ட
அதிவுன்னத நட்பு
அறிவொடு இணைத்த என்பள்ளி –
கல்ல}ரி
என் உறவுகள்! தொடர்புகள்…
அனுபவங்கள்
என
இத்தனையும் தந்திருக்கும்
என்னுடைய ஊர் நீ!
என் உயிரே! என் தாய்
மண்ணே!
எனக்குப் பெருமைதரும்
உலகத்து உறவுகளுள்’
‘என் உறவே’ முதன்மையானது!
முழுமையானது!
என்னும் செண்பகம் ராமசாமியின் மதுரை மண்ணுக்கு
என்ற கவிதை ஆ.பூமிச்செல்வம் முயற்சியால் தொகுக்கப்பட்டுள்ள மதுரைச் சிறுகதைகள்
என்னும் இந்நூலின் பின் அட்டைப்பகுதியில் இன்னும் எழிலூட்டுவதாய் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மக்களின், சமூக வாழ்நிலைகளையும்,
பண்பாட்டு
அசைவுகளையும் நுணுக்கமாக எடுத்துரைத்த இந்நூல் மதுரை வாழ்மக்களின் வழக்காறுகளையும்,
செயல்பாட்டம்சங்களையும்
அழகியலோடு ஆவணப்படுத்தும் போது தான் மதுரை பற்றிய முழுமையான புனைவுகள் இலக்கியத்தரவுகளில்
தனக்கேயுரிய தனித்த இடத்தில் பேசப்படும். இருந்தாலும், தமிழ்ச் சிறுகதை
வரலாற்றில் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
- இப்பதிவு 20.02.2016 அன்று மதுரை வானொலியில் (FM) வாசிக்கப்பட்டதாகும்.
மு.செல்லமுத்து
தமிழியல்துறை
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பல்கலைநகர் - மதுரை – 21.

Comments
Post a Comment