கல்லூரியை விட்டு விடை பெறுகிறார்கள்... கல்வியை விட்டல்ல!

 *என் மனதிற்கினிய

மாணவ மாணவிகளுக்கு* (2022-25 Batch)



எங்கள்

வாசல் தேடி வந்த

வசந்தகால பறவைகள் நீங்கள்!


இன்று உங்கள்

வாழ்வின்

ஓர் இனிய சகாப்தம்

முடிவடைகிறது!

இன்று 

புன்னகைக்கும் நீங்கள்

இங்கிருந்து

புறப்படவும் தயாராகுங்கள்!

நாளை புதியதோர் உலகம்

உங்களுக்காக உதயமாகிறது!


இன்னும்

சில நாட்களுக்குள்

சில மாதங்களுக்குள்

சில வருடங்களுக்குள்

உங்களில் பலர்

ஒருவருக்கொருவர்

உறவாடிக் கொள்வதை

மறந்திருப்பீர்கள்!


மெல்ல மெல்ல

சிலரின்

பெயர்களையும்

முகங்களையும்

நினைவுபடுத்த

வேண்டிய நிர்பந்தம்

உங்களுக்குள்

உருவாகியிருக்கும்!


சுகதுக்கங்களில்

நட்புக்காக வந்து நிற்கும்

அந்த நால்வர் மட்டுமே

அவ்வப்போது

இந்த கல்லூரிகால

நினைவுகளை

சுமந்து நிற்கும்

சுமைதாங்கியாக

சுழன்று வருவீர்கள்!


நெருங்கிப்பழகிய

நட்பின்

அழைப்புகளை

ஏற்கக்கூட நேரமில்லாமல்

காலப்போக்கில்

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு தேடலை

நோக்கி விரைந்து

ஓடிக் கொண்டிருப்பீர்!


அன்று அங்கு

அவனைப் பார்த்தேன்

இன்று இங்கு

இவனைப் பார்த்தேன்

என்று

போகிற போக்கில்

நலம் விசாரித்துவிட்டு

மூன்றாவது மனிதரைப் போல்

உங்கள் பக்கத்தில்

உட்கார்ந்திருந்தவன்

பறந்து செல்லும்

காட்சியை கண்கொண்டு

காணத் தயாராகுங்கள்!


சுற்றுலா

பிறந்தநாள்

கண்காட்சி

கல்யாணம்

காதுகுத்து

பிள்ளைப்பேறு

கிடா வெட்டு

என ஏதாவது

ஓர் நல்நிகழ்வுக்கு

ஆனந்தமாக அழைக்கும்

நண்பனின் ஆவலுக்கு

அடுக்கடுக்காக

காரணங்களைச் சொல்லி

வரமறுக்கும்

சூழ்நிலைக் கைதிகளையும்

புரிந்து கொள்வீர்கள்!


அவன் செட்டில் ஆகிட்டான்

இவன் இந்த பிசினஸ் பன்றான்

அவன் இன்னும்

படிச்சுட்டு இருக்கான்

அவன் படிச்சுப் பாசாகி

கவர்மென்ட்

வேலைக்குப் போயிட்டான்,

இவன் போலிஷ்க்கு

டிரை பன்றான்,

அவன் ஆர்மிக்கு போயிட்டான்

என்ற போட்டா போட்டிகளும்

உங்களுக்குள் உலாவரும்!


அன்னைக்கு அவனைப் பார்த்தேன்

கண்டும் காணாமல் போயிட்டான்

அவ்வளவுதான்ல...

என மனம் நொந்து

போவிர்கள் சிலர்...


அதற்குள் சிலருக்கு

திருமணம் ஆயிருக்கும்

சிலருக்கு வாழ்க்கையே

திசைமாறிப் போயிருக்கும்...


அவனுக்கு அப்படி ஆயிருச்சாம்!

இவனுக்கு இப்படி

ஆகும்னு நெனக்கல!

என்று மனம் நோகும்

உணர்வுகளும் வந்து போகும்...


எல்லாம் சில நாட்கள் தான்...


உயர் படிப்பில்

உன்னதத் தேடலில்

பன்முகத் திறமையில்

பாராட்டும் திட்டமிடலில்

படிப்பிற்கேற்ற வேலையில்

பலருக்குதவும் பொருளாதாரத்தில்

பார்போற்றும் பண்பில்

பலரும் விரும்பும் 

ழக்கவழக்கங்களில்

நல்ல வளர்ச்சியும் முதிர்ச்சியும் 

அடையும் நாள்

நாளை முதல்தான்

உங்கள் வாழ்வில் வரவிருக்கிறது!


இயன்றவரை

இணைந்திருங்கள்!

இனி நீங்கள்

இணையப்போவதில்லை!

இந்த கல்லூரிகால மாணவர்களாய்...

இனிய நண்பர்களாய்!


என் அன்பு

மாணவர்களே!

உங்களிடம்

பேசுவதற்கு

ஆயிரம்

இருக்கிறது!

கேட்பதற்குத்தான்

நாளைய

வகுப்பில்

நீங்கள்

இருக்கப்போவதில்லை...


உங்களைப் பிரிவதில்

மனம் வலிக்கும்

ரணங்கள் தான்

எனக்கும்!


இந்த வானத்தையே

தன் சிறகுகளால்

வாரி அணைத்துக்

கொள்ளத்துடிக்கும்

உங்களை இன்றுமுதல்

நாங்களும் விடுவிக்கிறோம்!


ஒற்றுமையாக

உயரப்பறந்து

உயர்ந்து வாருங்கள்!

என் அன்புச் செல்வங்களின்

வாழ்வு சிறக்க

என் வளமான வாழ்த்துகள்!

வாழ்க வளமுடன்!


என்றும் உங்கள்

நினைவுகளுடன்

உங்களின் அளப்பரிய

அன்பைப் பெற்ற ஆசிரியர்...


*Dr.M.Chellamuthu* 

Assistant Professor in Tamil,

Government arts and science College,

Reddiarchathiram, DINDIGUL. 624622. 

09.05.2025












Comments

Popular posts from this blog

விருதுநகர் வீரரின் அரசியலும் ஆளுமையும்

ஆ.பூமிச்செல்வத்தின் - 'மதுரைச் சிறுகதைகள்' தேர்வும் தொகுப்பும் நூல் விமர்சனம்

பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணம் (நவீனப் பெண் தன்வரலாற்றுப் புனைவுகளினூடான வாசிப்பு)