சண்டிவீரன் திரைப்படம் - ஒரு பார்வை…
எந்தவொரு சமுதாய நிகழ்வுகளையும் காலத்திற்கேற்ற இரசனையோடு வாழும் மனிதர்களுக்கும் வருங்கால மனிதர்களுக்கும் எடுத்துச்சொல்லும் சேவையில் பெரும்பங்கு வகிப்பது ஊடகம் என்று சொல்லலாம். அந்த வகையில், A.சற்குணம் இயக்கத்தில், அதர்வா ஆர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சண்டிவீரன் திரைப்படத்தின் திரைக்கண்னோட்டத்தினை இன்று பார்க்கலாம்.
போதுமான வாழ்வியல் தேவைகள், தான் பிறந்த மண்ணில் கிடைக்காத பொழுது அல்லது ஜனநாயகம் தர மறுக்கின்ற பொழுது அங்கிருந்து இடம்பெயரும் சூழ்நிலை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் இன்றும் நிலவுகிறது. எந்தவொரு உயிரினங்களின் அடிப்படைத்தேவையும் அத்தியாவசியத் தேவையும் முதலில் தண்ணீர் தான், இயற்கை தந்த மிகப்பெரிய கொடையும் அதுதான். சண்டிவீரன் திரைப்படமும் தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் நிகழும் இந்தப் பிரச்சனையைத் தான் அதர்வா ஆர்த்தியின் காதலோடும், இரண்டு கிராமத்தின் கலவரத்தோடும் சில பல நகைச்சுவையோடு சித்தரிக்கின்றது.
எந்தவொரு சமுதாய மாற்றத்திற்குப் பின்னணியிலும் கட்டாயம் ஒரு உண்மையான போராளியின் உயிர்த்தியாகம் குருதிவடித்து உணர்த்தப்பட்டிருக்கும். சண்டிவீரன் திரைக்கதையில் வரும் அதர்வாவின் தந்தை போஸ் வெங்கட் தன் பக்கத்து கிராமத்து மக்களின் தண்ணீர் தேவைக்காகவும் அதைத் தர மறுக்கும் நியாயம் இல்லாத தன் கிராமத்து மக்களுக்கும் இடைப்பட்ட கலவரத்தில் மனிதாபிமானத்தோடு தடுக்க முற்படுகையில் கொல்லப்படுகிறார். சிறுவயதில் தன் கண்முன்னே தந்தையை பறிகொடுத்த அந்நிகழ்வு அதர்வாவின் நெஞ்சில் நீங்காமல் நின்றது. நியாயமான கோரிக்கைக்காக போராடும் தன் பக்கத்து கிராமத்துக்காக நண்பர்களின் துணையோடு அர்த்தமற்று இறந்துபோன தன் தந்தையின் வெற்றி காணாத போராட்டத்தை வென்றெடுக்க களமிறங்கிறார் சண்டிவீரன்.
தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்ப பாரத்தை தலையில் சுமத்தி சிங்கப்பூர் சென்று திரும்பும் அதர்வா, அயல்நாட்டில் பல அவமானங்களைச் சந்தித்திருந்தாலும் பிறந்த மண்ணிற்கு வந்ததும் கைநிறைய சம்பாதித்தது போன்ற நடை உடை பாவனையில் சென்று வந்த நாட்டின் பெருமை பேசியே கிராமத்து மக்களிடம் பொய்யான உயர்வைக் காட்டுவது மிகவும் எதார்த்தமாகவே உள்ளது. கிராமத்து பெண்ணாக தலைநிறைய மல்லிகைப்பூவோடும் முகம் நிறைந்த புன்சிரிப்போடும் பாவாடை தாவணியில் ஸ்கூட்டியில் பவனிவரும் தாமரை என்ற ஆர்த்தியின் கதாபாத்திரம் உண்மையில் திரையிட்ட இடமெல்லாம் இரசிகர்களை கவர்ந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.
செல்போனில் வீடியோ கால் மூலமாக வெளிப்படுத்தும் அதர்வா ஆர்த்தியின் காதல், கிராமப்புறங்களின் பச்சைபுல்வெளியிலும் வயல்வரப்பிலும் கோயில் குளங்களிலும் இனிமையான இரண்டே பாடலில் வலம் வந்து கண்டிப்பாக இரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை. அதிலும், விஞ்ஞான வளர்ச்சியின் வேகம் கிராமத்து மக்களுக்கும் எந்தளவு கிடைத்துள்ளது என்பதனை சண்டிவீரன் இயக்குநர் எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.
தாமரையின் தந்தை மில்லுக்காரரும் பிரசிடெண்டும் ஊர் முக்கியஸ்தர்கள். எல்லா தந்தையைப் போலவே மில்லுக்காரரும் அதர்வா ஆர்த்தியின் காதலுக்கு மறுப்புத்தெரிவிக்கிறார். தான் வெளிநாடு சென்றுவர துணைபுரிந்த பக்கத்து ஊர் நண்பர் வீட்டிற்கு சென்ற அதர்வா அங்கு உள்ள தண்ணீரைக் குடித்து அதிர்ச்சியாகி நிற்கிறார். அந்தசமயம்; ஒரு தாயின் கதறல்சத்தம் கேட்டு ஓடிப்பார்க்க உப்புத்தண்ணிரைக் குடித்து வளர்ந்த மகன் செத்துவிட்டான் என்ற செய்திகேட்டு, மரண ஓலத்தில் ஒலிக்கும் ‘தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்னாத்தான் இருந்துச்சு விலையில்லாம கெடந்துச்சு, ஆனா இப்போ எல்லாமே தலைகீழா மாறுச்சு’ என்ற மரணகீதம் கேட்போர் நெஞ்சை ஒருநிமிடம் கிரங்கடித்துவிடுவதாக ஒலிக்கிறது. இதற்குக் காரணமான மில்லுக்காரர் பற்றி நண்பர் சொல்லவும் ஊரணியை எப்படியாவது அவரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏலத்திற்கு கேட்கிறார் பாரி. ஏலம் கைமீறி போரதையறிந்தும் கண்முன்னே அநியாயம் நிகழ்வது கண்டும் பொருட்படுத்த முடியாத பாரி பக்கத்து கிராமத்தினரை வரவழைத்து எப்படியாவது குளத்தினை மீட்டெடுக்கப் போராடுகிறார். இறுதியில் விட்டுக்கொடுக்காத மில்லுக்காரர் ஆட்களுக்கும், பக்கத்து கிராமத்தினருக்கும் பெரும் கலவரமாகி கைகலப்பில் முடிகிறது. பகைதீர்த்துக் கொள்ளத் துடித்த பக்கத்து ஊரார் பிரசிடெண்டை லாரியால் மோதி சாகடிக்க முயற்சித்தனார். ஏரிக்குள்ளும் விழுந்து மூழ்காமல் கைகெட்டும் தூரத்தில் தண்ணீர் இருந்தும் குடித்துக் கரையேற முடியாமல் பாலத்திற்கும் ஏரிக்கும் இடையில் கார்கதவில் அடிபட்டு மரணத்தின் உச்சத்தில் தண்ணீருக்குத் தத்தளிக்கும் பிரசிடெண்டிற்கு தண்ணீரின் தேவை அப்போது தான் மனதில் தெளிந்தது. பிரசிடெண்டை கொல்ல முயற்சித்த பக்கத்து கிராமத்தினர் அனைவரையும் கூண்டோடு ஒழிக்க இரவோடு இரவாக திட்டம் தீட்டினர். மில்லுக்காரர் இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி பாரியின் கதையையும் முடித்துவிட தன் ஆட்களுக்கு அறிவுறுத்தினார். கலவரத்தின் இழப்புகளை எண்ணிய பாரி அதனை எப்படியாவது தடுத்துவிட தன் நண்பனின் துணையோடு தன் ஊரார் கடக்கப்போகும் கால்வாய்க்குள் மின்வயரினை துண்டித்துப் போடுகிறார்.
தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களை வீழ்த்திவிட்டு, மின்இணைப்பை துண்டிக்க முடியாததை அறிந்த பாரி, ஊரார் உயிரைக்காப்பாற்ற தானே முன்னோக்கி தன்னுயிரைக்கொடுக்க துணிகிறார். தன்னூரார் ஒருவரும் சாகக்கூடாது பக்கத்து கிராமத்தினரும் வாழவேண்டும் என நினைக்கும் பாரியின் செயல் அனைவரையும் சற்றே சினத்தை எழுப்பி காரணத்தைக் கேட்டன. அதற்குப் பாரி அவர்களையும் மில்லுக்காரரையும் நோக்கி “ ஓ வீட்ல தவுடு அள்ரவ மவன்னு வாய்க்கு வாய் என்ன கூப்பிடுரியே, இதே குளத்து பிரச்சனைக்காகத் தானய்ய எங்க அப்பா செத்தாரு, ஏன் அப்பா சாகலன ஏ அம்மா ஓவீட்டுக்கு ஏய்யா தவுடு அள்ள வருது, நா ஏன் வெளிநாட்டுக்கு போய் க~;டப்பட போரேன், அப்பா இல்லாத புள்ளைக்கு தான்ய அதோட அரும தெரியும். இதே கலவரத்துல செத்துப்போன அந்த ஊருக்காரனுக்கு எத்தனை பேருக்கு அப்பா இல்ல, அம்மா இல்ல, ஏன் புள்ளயே இல்லனு தெரியுமா ! ஏய்யா இந்த வயசுல அருவாவ தூக்கிட்டு வந்து நிக்கிறியே உன் மவன் என்னான ! மீன் பிடிக்கிறத தவிர வேற எதுக்குமே அந்தக்குளம் நமக்கு பயன்படுறதுல்ல, ஆனா அவங்களுக்கு அதவிட்ட குடிக்கிறதுக்கு வேற தண்ணி இல்ல, தயவு செஞ்சு உங்ககாலுல வேணுனாலும் விழுறேன் அந்தக்குளத்த குடுத்து தொலைங்கய்யா! என்ற பாரியின் கதறலுக்கு ஊரே ஒரு நிமிடம் செவிமடுத்து கேட்டு எல்லாருக்கும் புத்தி கெட்டு போச்சுடா! ஒரு வரு~ம் கர்நாடகக் காரன் தண்ணி தரலன நமக்கு எவ்ளோ கோவம் வருது, பக்கத்து ஊரானுக்கு நாம தண்ணி தரலான எப்படிடா! என்று ஊரார் அனைவரும் வன்முறையைக் கைவிட்டு மில்லுக்காரர் மகள் தாமரையை பாரிக்கு திருமணம் முடிக்க பிரசிடெண்டோடு ஒன்று சேர்ந்தனர்.
வரட்டுக் கௌரவத்தால் குளத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது! தன் மகளையும் கட்டித்தர முடியாது என மறுத்த மில்லுக்காரரை எதிர்த்து, ஊரார் சம்மதத்தோடு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். எது ஒன்றையும் தன் மனைவி பெயரில் பதியும் மில்லுக்காரர் குளத்தினையும் பதிய மகள் வாழ்க்கைக்காக மற்றவருக்கும் பயன்படட்டும் என தாமரையின் தாயார் வரதட்சனையாக மருமகனுக்கு அந்தக்குளத்தை எழுதிக்கொடுத்துவிட்டார். மாமனார் சம்மதித்தால் மட்டுமே தாலி கட்டுவேன் என்ற மருமகனின் செயலால் மனமுறுகிய மில்லுக்காரர் ஊரோடு சோந்து சிரிக்க நகைச்சுவையோடு சண்டிவீரன் காதலும் போராட்டமும் வென்றுவிட்டது.
எந்தவொரு பிரச்சனைக்கும் பகைதீர்த்துக் கொள்ள களமிறங்கிவிட்டால் இழப்புகள் என்பது இரு அணிகளுக்கும் இருக்குமென்பதை முதலில் புரியவைத்து, தேவைப்படாத ஒன்றையோ அல்லது தேவைக்கு மிஞ்சியதையோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு பெருந்தன்மையோடு வழங்கவேண்டும், அங்கு தான் உண்மையில் மனிதநேயம் மலர்கிறது என்றும், நியாயம் அல்லது மனதாபிமானம் என்பது எந்தளவு மனிதர்களிடம் இருக்கிறது என்ற கேள்வியோடு, இந்த அளவாவது இருக்க வேண்டும் என்ற பதிலோடு சண்டிவீரன் திரைக்கதை தண்ணீர்த் தேவையில் தத்தளிக்கும் எத்தனையோ கிராமப்புற மக்களின் நன்றியையும் பேராதரவையும் பெற்றதோடு மக்கள் மனதில் மனிதாபிமானத்தின் பயன்பாட்டினை அழகான திரைக்கதை வடிவமைப்பில் இல்லங்கள் தோறும் விதைத்துவிட்டு சமூகமாற்றத்தினை எதிர்பார்த்து மாறும் என்ற நம்பிக்கையில் விரிகிறது.
மு.செல்லமுத்து,
தமிழியல்துறை,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 21.
Comments
Post a Comment