தா.பாண்டியன் - திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் நூல் விமர்சனம்
தமிழகத்தின் மானுட
மேம்பாட்டுக்காக ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கங்களின் விடுதலைக்காக தன்
வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட அரசியல்
வித்தகர் தா.பாண்டியன் அவர்கள் இயற்றிய ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் நூல்
பற்றிய விமர்சனத்தை இன்று உங்கள் முன் வைக்கிறேன். வள்ளுவரை நம் காலத்திற்குக்
கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட
முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும்
நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை
யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். அந்தவகையில்,
தெளிந்த
அறிவுடன் தா.பாண்டியன் அவர்களின் முயற்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நீயூ செஞ்சுரி
பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் நூலானது, உண்மையான
ஆராய்ச்சி நூலாக எக்காலத்திற்கும் பயனள்ள உயர்ந்த ஆராய்ச்சி நூலாக இலக்கிய
வாசிப்பில் ஈடுபாடுடையவர்கள் போற்றத்தகும் என்னும் கருத்தினை இந்நூல்
விமர்சனத்தின் வாயிலாக உங்கள் முன் உணர்த்த விரும்புகிறேன்.
தமிழிலக்கியப் பெருமிதத்தையும், தமிழனின் சிந்தனை
உச்சத்தையும் உலக அரங்கில் உயர்வுற எடுத்துரைக்கும் ஒப்பற்ற நூல் திருக்குறள்.
இந்நூலுக்கு இதுவரை எண்ணற்ற உரைகளும், பதிப்புகளும், நூற்றுக்கணக்காக
மொழிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. இந்த வரிசையில் புகழ்பாடும் படைப்புகள் பலவும்,
கணக்கற்ற
ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழின் பிற படைப்புகளுக்கு எழுந்துள்ள ஆராய்ச்சி
நூல்களைவிட திருக்குறளுக்கு பல மடங்கு மிகுதியாகும். ஆனாலும், இவற்றில்
தனித்தொளிர்வனவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவ்வாறு தலைசிறந்தனவாய்த் திகழும்
சிலவற்றில் புத்தம் புதியதாய்ப் பொலிவு மிக்கதாய் இடம்பெற்றுள்ள மாட்சிமிக்க நூலே ‘தா.பாண்டியனின் -
திருவள்ளுவரின் அரசியல் பெர்ருளாதாரம்’ என்னும் நூலாகும்.
வள்ளுவர் வாழ்ந்த
காலத்தையும் களத்தையும் நம் அனைவரின் கருத்தில் பதிய வைக்கின்ற முதற்கட்டுரை
நூலின் அடித்தளமாக அமைந்து சிறக்கின்றது. வள்ளுவரின் கடவுட்கொள்கையையும், சமுதாயப்
பார்வையையும், சிந்தனைப்போக்கையும், உழவு குறித்த எண்ணங்களையும், பகுத்துண்ணல், அரசியல்
பொருளாதாரம் ஆகிய ஏழு தலைப்புகளில், கோவலன் - கண்ணகி வாழ்வதற்கு இளங்கோவடிகள்
எழுப்பிய எழுநிலை மாடங்களைப் போல், வள்ளுவருக்கு இந்நூற்கருத்தின் வாயிலாக ஏழுநிலை மாடத்தை
எழுப்பியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். வள்ளுவத்தை முதன்மை நிலையில் ஆராயும்
பொழுதிலேயே மனிதகுல வரலாறு, உலகளாவிய அரசியல் சமூகம், சமயம், புரட்சிகர
மாற்றங்கள், மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் முதலிய அரிய சிந்தனைகளையும், அக்கறை மிக்க
கருத்துக்களையும் படிப்பவர்களின் நெஞ்சில் இந்நூல் விதைக்கின்றது.
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்ற மேன்மையான கருத்து, மனிதா, இயற்கை தந்துள்ள
வாழ்வதற்கான ஒரே வாய்ப்பை, மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்து ஈந்து உவந்தளித்து, பல்லுயிர் ஓம்பி,
பகுத்துண்டு
செந்தாண்மை பூண்டு, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனச் சிந்தித்து, பழியஞ்சி, பண்பு காத்து
வாழ்ந்தால், மனிதனும் தெய்வப் பிறவியாகக் கருதப்படுவான் என்பதில் தான் வள்ளுவரின் கருத்து
மையம் கொண்டுள்ளது என நூல் முழுவதும் எடுத்துரைக்கும் நூலாசிரியர், வள்ளுவர் தொட்ட
உச்சங்களையெல்லாம் அழுத்தமாக கோடிட்டுக் காட்டி, வள்ளுவர் தொடாது விட்ட
சிகரங்களையும் சுட்டுக்காட்டியுள்ளார் என்பதே நூல் உணர்த்தும் உண்மை.
திருவள்ளுவரின்
அரசியல் பொருளாதாரம் என்னும் இந்நூலை முழுமையாகப் படித்தபொழுது என் நினைவுக்கு
வருவது ‘ஏங்கெல்சை, கார்ல்மார்க்சின் ‘இரண்டாவது மூளை என்பார்கள். அதனை ஒப்பிடும் பொழுது
மார்க்சிய சிந்தனையாளர் தா.பாண்டியன் அவர்களை தோழர்.ஜீவாவின் இரண்டாவது மூளை
எனக்குறிப்பிடும் தி.ராஜகோபலானின் இக்கருத்து உண்மையில் ஏற்கத்தக்கது என்றுதான்
சொல்லவேண்டும். திருக்குறளுக்கு பதவுரை,
பொழிப்புரை,
விருத்தியுரை
என பலரும் எழுதியிருக்கிறார்கள், ஆனால், திருவள்ளுவரின் உள்ளக்கிடக்ககையை உணர முயன்றவர்கள் இருவரே.
ஒருவர் பேராசிரியர்.வ.சு.ப.மாணிக்கம், மற்றவர் மார்க்சிய சிந்தனையாளர் தா.பாண்டியன்.
இவருடைய முன்னுரையைப் படிக்கின்ற எவரும் மணக்காயங்களோடுதான் வெளியே வரமுடியும்.
பேசுவது போல் எழுதுவதும், எழுதுவது போல் பேசுவதும் தமிழ்த்தென்றல் திரு.வி.க
அவர்களுக்கு கைவந்த கலை. அக்கலை இந்நூலாசிருக்கு இயல்பாகவே படிந்திருப்பதை
நூலுக்குள் நுழைபவர்கள் உணர்வார்கள். மேலும், நூலாசிரியரின் கரம்
பேனாவைப் பிடித்திருந்தாலும், அந்தக் கரத்தில் ஏரின் கொழுவும், ஏர் ஓட்டும் உழவனின்
கைரேகையும் படிந்திருப்பதை, உணர்வோடு எதையும் உள்வாங்கிப் படிப்பவர்களால் கட்டாயம்
உணரமுடியும்.
நவநாகரிகங்களின்
வளர்ச்சியில் வந்த செல்பேசிகள், தமக்கென்று எழுப்பிக்கொண்ட கோபுரங்களால் நம்முடைய
சிட்டுக்குருவிகளைக் கூடச் சுட்டுப் பொசுக்கி விட்டனவே என்று ஒரு
சுற்றுச்சூழல்வாதியாகவும், ஒரு மானுடவியலாளராகவும் இருந்து வருந்துகின்றார்.
எப்படிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்று சொல்லவந்த பாரதி ‘சிட்டுக் குருவியைப் போல
விட்டு விடுதலையாகி’ என்பான். அந்த இனமே இன்று இல்லையே என்று நூலாசிரியரின்
உயிரிரக்கம் நியாயமாகத்தான் தோன்றுகிறது.
திருவள்ளுவர் உழவுத்தொழிலை
ஏன் முதன்மைப்படுத்தினார் என்பதற்கும், மனிதநேயம் மிக்கவனுடைய செல்வம், ஊருணி நீர்
போலவும், மருந்துமரம் போலவும் நடுவூருக்குள் பழுத்த மரம் போலவும் இருக்கவேண்டும் என்று
திருவள்ளுவர் ஏன் முன்மொழிந்தார் என்பதற்கு விளக்கம்தரும் இந்நூராசிரியரின்
சிந்தனை இலக்கிய உலகில் இதுவரை யாரும் சொல்லாதவை. இதனை இன்றைய ஆட்சியாளர்கள்
பாலபாடமாகப் படித்தால் தான் நாடுநலம் பெறும், மனிதகுல அறிவும்
வளம்பெறும்.
ஒரு நாட்டினுடைய
நிதியமைச்சராக இருப்பவர், நிதி நிலையறிக்கையைத் தயாரிப்பதற்கு முன், ‘இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ என்னும் திருக்குறளைக் கட்டாயம் படிக்க
வேண்டும். அதைப் படிப்பதற்கு அரிதாக இருந்தால், இ;ந்நூலாசிரியர்
தந்திருக்கும் விளக்கவுரையையாவது படிக்கவேண்டும். திருவள்ளுவரை அறவழியாகவே
பார்த்தவர்களை, இனிமேல் ஒரு பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது இந்நூல்.
திருக்குறளை உள்வாங்கி உற்றுப்படித்து வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கே வாசகர்களை
அழைத்துச் சென்ற இந்நூலாசிரியர், திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பழங்கணக்கையே போட்டுப்
போட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் புதுக்கணக்குப் போட்டிருக்கிறார் என்பதே
உண்மை.
இயற்கையோடு
இசைந்து வாழ்வியலை அனுபவிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இந்நூலாசிரியர்,
ஒரு
தொழிற்சங்கவாதியாகவும் இருப்பதால், உழவுத்தொழிலுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை
விலாவாரியாகத் தொகுத்துரைத்து, உழவுத்தொழிலை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களையும்
அறிவியல் ரீதியாக விவாதிக்கின்றார்.
சங்கப்புலவனிலிருந்து
– பாரதி
காலம் வரையில் மன்னர்களையோ, ஜமின்தார்களையோ ஆராதனை செய்யாத புலவர்கள் இல்லை!
சீட்டுக்கவியோ நோட்டுக்கவியோ எழுதாத கவிஞன் இல்லை! இவர்களில் தப்பிப்பிழைத்தவர்
வள்ளுவர் மட்டுமே என்பதனை வலியுறுத்தி வரும் மதிக்கத்தக்க மனிதரின் சிந்தனைகள்
யாவும் தமிழ்ச்சூழலில் வரவேற்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. தமிழிலக்கிய வளமும்,
ஆங்கில
இலக்கிய நலமும் உலகளாவிய அரசியல் சமூகவியல் ஞானமும், மார்க்சியத் தேர்ச்சியும்
மிகைப் படுத்தாத நடுநிலை நோக்கும் உண்மைகண்டு உரைக்கும் திறமையும் கொண்ட
ஒருவரால்தான் இப்படி ஒரு நூலை வள்ளுவம் குறித்து எழுதமுடியும் என்பதற்கு ;திருவள்ளுவரின்
அரசியல் பொருளாதாரம்’ என்னும் இந்நூலைத் தான் ஆதாரமாகக் கூறவேண்டும்.
திருவள்ளுவரை
அவர்தம் காலத்தில் வைத்தும், காலத்தைக் கடந்து நிற்கும் நிலையில் வைத்தும் சற்றும்
நெறிபிறழாது ‘ஊருக்கு நல்லது உரைப்பேன் - எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்னும் பாரதி வழி
நின்று திருக்குறளில் காணலாகும் கடவுட் சிந்தனைகள், அரசியல் பொருளாதாரச்
சிந்தனைகள் முதலியவற்றில் மார்க்சிய ஒளி பாய்ச்சும் அதே வேளையில், அந்த ஒளிவெள்ளத்திலேயே
வள்ளுவரை மூழ்கடித்து விடாமல், வள்ளுவரை வள்ளுவராகவே காட்டும் நுட்பமான ஆராய்ச்சியை நூல்
முழுவதும் நிகழ்த்தி, செயற்கரிய – செய்யத்தக்க – செய்யவேண்டிய வள்ளுவப் பணியை எல்லோராலும்
அன்பாக தோழர் என்று அழைக்கப்படும் தா.பாண்டியன் செய்திருப்பது உண்மையில் தமிழ்
கூறும் நல்லுலகம் என்றும் சரித்திரத்தின் சாதனைகளில் வைத்துக் காக்கவேண்டும்
என்பதனை இந்நூல் விமர்சனத்தின் வாயிலாக வலியுறுத்த விரும்புகிறேன். ஏனென்றால்,
தமிழுக்குத் தனிவனப்புத்
தந்திருப்பது திருக்குறள்!
திருக்குறளுக்குப்
புதுவனப்பு தந்திருப்பது இந்நூல்!
- இந்நூல் குறித்து 26.02.2016 அன்று மதுரை வானொலியில் (MADURAI FM) விமர்சிக்கப்பட்டது.
- இந்நூல் குறித்து 26.02.2016 அன்று மதுரை வானொலியில் (MADURAI FM) விமர்சிக்கப்பட்டது.
மு.செல்லமுத்து.
Comments
Post a Comment